ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிப்பதாக வந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என்று நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷாஸ் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார்.
ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரமேஷ்.
மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய கதையை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இப்படத்தை மேலாண்மை கல்வியில் தங்கப்பதக்கம் வென்ற ராகுல் பரமஹம்சா என்பவர் இயக்கி வருகிறார். முதல்பாகத்தில் இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தில் விஷால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. முந்தைய பாகத்தில் சரத்குமார் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அதுபோல் இப்படத்தில் விஷால் போலீஸ் வேடத்தில் நடிப்பார் என்று கூறிவந்தனர்.
ஆனால் இவை தவறான செய்திகள் என விஷாலே இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஜித்தன் 2-ம் பாகத்தில் நான் நடிப்பதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். இவை அனைத்தும் அடிப்படையில்லாத பொய்கள். இதை அனைவரும் தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
Post a Comment