தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் எந்த பஞ்சாயத்தாக இருந்தாலும் கூப்பிடுங்க நாட்டாமை சரத்குமாரை எனும் அளவுக்கு, பரபரப்பாக பஞ்சாயத்து பண்ணி தீர்வு கண்டு வருகிறார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.
ஆனால் அந்த சரத்குமாருக்கே இப்போது ஒரு பஞ்சாயத்து. அவர் நடித்த விடியல் படம் முடியாமல் இழுத்தடிப்பதாக வழக்கு நீதிமன்றம் போக, இப்போது தீர்ப்பு வந்துள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகிய இருவரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கால அவகாசம் நிர்ணயித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கிரிகுஜா பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.சுந்தரராமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
நடிகர் சரத்குமாரின் ஆர்.ஆர்.ஆர். மூவிஸ், ராதிகாவின் ஐ பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து "விடியல்' என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எங்கள் நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
ஆனால், படம் தயாரிப்பது தொடர்பாக நாங்கள் ஒப்பந்தம் செய்த பிறகு, "சென்னையில் ஒரு நாள்' என்ற திரைப்படத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு ஆர்.ஆர்.ஆர். மூவிஸ், ஐ பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தயாரித்து வெளியிட்டன.
எங்களுடன் ஒப்பந்தம் செய்து, படத்தை முடித்துக் கொடுக்காமல் 'சென்னையில் ஒரு நாள்' படத்தை வெளியிடக் கூடாது எனக் கோரி வழக்கு தொடர்ந்தோம். அப்போது, 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 'விடியல்' படத்தை முடித்துக் கொடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர்.
ஆனால், அவர்கள் உத்தரவாதம் அளித்தவாறு படத்தை இதுவரை முடித்துக் கொடுக்கவில்லை. இந்தப் படம் தயாரிப்பதற்காக இதுவரை ரூ. 1.38 கோடி வழங்கியுள்ளோம்.
எனவே, நாங்கள் அளித்த ரூ.1.38 கோடி தொகைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் அல்லது அசையாச் சொத்துகளை முடக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 'விடியல்' திரைப்படத்துக்கான படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள் சரத்குமார், ராதிகா தரப்பினர் முடிக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்காமல், மேலும் அவகாசம் கோரினால் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்த பின்னரே அவகாசம் வழங்கப்படும் என உத்தரவிட்டார்.
Post a Comment