ரமணா படத்தின் ஹிந்தி ரீமேக்கான கப்பார் இஸ் பேக் படத்தில் மருத்துவர்களைக் கேவலமாக சித்தரித்ததற்காக இந்திய மருத்துவ சங்கம் (IMA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
படக்குழுவினருக்கு வக்கீஸ் நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான ரமணா படம், ஹிந்தியில் ரீமேக் ஆகி கப்பார் இஸ் பேக் என்கிற பெயரில் சமீபத்தில் ரிலீஸானது. இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கரீனா கபூர், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதையில் உருவான இப்படத்தை க்ரிஷ் இயக்கியுள்ளார். இன்னும் சில நாள்களில் 100 கோடி ரூபாயை எட்டிவிடும் அளவுக்கு நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது இந்தப் படம்.
இந்த நிலையில் இந்தப் படத்தை எதிர்த்து இந்தியா முழுக்க 2.5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்திய மருத்துவ சங்கத்தின் தலைமை நிர்வாகிகளான மருத்துவர்கள் ஏ. மார்த்தாண்ட பிள்ளை, கேகே அகர்வால் ஆகிய இருவரும் இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘கப்பார் இஸ் பேக் படத்தில் மருத்துவத் துறையை மோசமாக சித்தரித்துள்ளதைக் கண்டு வேதனை அடைந்துள்ளோம். மருத்துவத்துறையை இழிவுபடுத்தும் விதமாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் சித்தரித்துள்ளார்கள். இதற்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.
இந்தப் படத்தில் இறந்து போன ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. சமீபகாலமாக மருத்துவர்கள் மீதான வன்முறை அதிகமாகிவிட்ட சமயத்தில், இந்தப் படம் தவறான முன்னுதாரணத்தை அளிக்கிறது. இது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது. மருத்துவர்கள் மீதான வன்முறை மேலும் தூண்டவே இது உதவும். இதனால் இந்தக் காட்சி உடனடியாக படத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்று ஐஎம்ஏ விரும்புகிறது. அப்படி செய்யும்வரை இந்தப் படம் புறக்கணிக்கப்பட வேண்டும். தடை செய்யப்படவும் வேண்டும். இந்தப் பிரச்னை தொடர்பான விழிப்புணர்வுக்காக அந்தக் காட்சியின் வீடியோ அனைத்து மருத்துவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
தணிக்கைத் துறை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, சுகாதாரத்துறை, உள்துறை ஆகிய அரசு அமைப்புகள் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களின் உதவியுடன் ஐஎம்ஏ தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி சென்னையில் உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவமாகும். இந்தப் படம் வெளியான பிறகு திருச்சியிலும் கூட இதே போன்ற சம்பவம் நடந்தது. இது மக்களுக்கும் தெரிந்த சமாச்சாரம் என்பதாலேயே இந்தப் படத்துக்கு தமிழகத்திலும் ஆந்திராவிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
Post a Comment