சென்னை: புறம்போக்கு.. இந்த நல்ல வார்த்தையை பலரும் கெட்ட வார்த்தையாக்கி விட்டனர். பொதுப் பயன்பாட்டுக்கானவை என்பதைத்தான் புறம்போக்கு என்பார்கள். ஆனால் புறம்போக்கு என்ற இந்த வார்த்தையை எப்படியெல்லாம் நம்மவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சரி விஷயத்துக்கு வருவோம்.. இன்று புறம்போக்கு என்ற பெயரில் ஒரு படம் வருகிறது. இயற்கை என்ற அழகான கவிதைப் படத்தைக் கொடுத்த எஸ்.பி. ஜனநாதன் இயக்கியுள்ள படம். மூன்று ஹீரோக்களை வைத்து உருவாக்கியுள்ள படம்.
அருமையான கதை இப்படத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். அதாவது தூக்குத் தண்டனை குறித்த கதையாம் இது. ஒரு தூக்குத் தண்டனைக் கைதி, தூக்கில் கைதிகளைப் போடும் கூலித் தொழிலாளி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோர் சம்பந்தப்பட்ட கதையாம் இது.
இதில் கைதியாக ஆர்யா வருகிறார், தூக்கில் போடும் தொழிலாளியாக விஜய் சேதுபதி, காவல்துறை அதிகாரியாக வருகிறார் ஷாம்.
ஒரு வேளை விருமாண்டி படத்தின் சாயல் இருக்குமோ என்ற சந்தேகம் வரலாம். எதற்கும் படத்தைப் பார்த்து விட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவும்.
ஆனால் இப்படத்தில் கதை வேறு மாதிரியாக இருப்பதாக ஜனநாதனே கூறியுள்ளார். படத்தில் தூக்குத் தண்டனை தொடர்பாக பல நுனுக்கமான விஷயங்களை சொல்லியுள்ளாராம். வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் ஜனநாதன் கூறுகிறார்.
படம் குறித்து ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.. எனவே யாராவது உங்களைப் பார்த்து "போடா புறம்போக்கு" என்றால் கோபப்படாதீர்கள்.. புறம்போக்கு படத்துக்குப் போப்பா என்ற அர்த்தத்தில் அவர் உங்களைச் சொல்லியிருக்கலாம்!
Post a Comment