சென்னை: நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவது தொடர்பான பிரச்சினையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் நடிகர் விஷாலுக்கும் நடந்து வருகின்ற பிரச்சினை ஊருக்கே அவலாக மாறியிருக்கும் இந்த வேளையில் நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூலை மாதம் 15 ம் தேதி அன்று நடைபெறும் என்று சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
ஒருபக்கம் சங்கக் கட்டிடம் முடிஞ்சாத்தான் கல்யாணம் என்று மார்தட்டிக் கிளம்பி இருக்கிறார் நடிகர் விஷால். மறுபக்கம் சங்கக் கட்டிடம் தற்போது கட்ட முடியாது என்று கூறி வருகிறார் தலைவர் சரத்குமார். தினமும் தமிழ்த் திரையில் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ இவர்கள் இருவரின் ஆவேசப் பேட்டிகள் தாங்கி தினசரி பத்திரிக்கைகள் வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று மாலை தியாகராய நகரில் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி முன்னிலையில் நடைபெற்றது. பல்வேறு நடிக, நடிகையர் உறுப்பினர்களாக கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் இரு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
2015 -2018 க்கான நடிகர் சங்கத் தேர்தல் வரும் 15.7.2015 அன்று வடபழனியில் என்.எஸ்.கலைவாணர் சாலையில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நடத்துவது என்றும், தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர் ஜெ. செல்வராசன் மற்றும் அவருக்கு உதவியாக வழக்கறிஞர் ஜேம்ஸ் அமுதன் ஆகியோரை நியமிப்பது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விஷால் களத்தில் குதிப்பாரா.........?
Post a Comment