ட்விட்டரில் ரஜினியைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை இரண்டு மில்லியன்களைத் தாண்டியுள்ளது. இது ட்விட்டரில் ட்ரெண்டிங்காகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 2013-ல் ட்விட்டருக்கு வந்தார் ரஜினி. வந்த இரு ஆண்டுகளில் மொத்தம் 13 ட்விட்டுகள் மட்டுமே அவர் போட்டுள்ளார்.
ரஜினி ட்விட்டருக்கு வந்த போது, சமூக வலைத் தளத்தை தனது பட புரமோஷனுக்குப் பயன்படுத்துகிறார் என்றெல்லாம் குற்றம்சாட்டினார்கள்.
ஆனால் அவர் ட்விட்டரில் தொடர்ந்து எதுவும் எழுதவில்லை. ஆரம்பித்தபோது தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்றி சொல்லி இரு ட்வீட்டுகள் போட்டார்.
நரேந்திர மோடி மற்றும் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிகளுக்காக இரு ட்வீட்டுகளும், கோச்சடையான் வெளியான போது இரு ட்விட்டுகளும் போட்டிருந்தார்.
பின்னர் தனது பிறந்த நாளுக்கு மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி கூறி ஒரு பதிவிட்டார். தனக்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள், அமிதாப் பச்சன் மற்றும் கமல் ஹாஸன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி இரு ட்வீட்டுகள் போட்டுள்ளார்.
கடைசியாக மார்ச் 23-ம் தேதி, சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் லீ க்வான் யூ இறந்த அன்று இரங்கல் தெரிவித்து ட்விட் போட்டுள்ளார்.
மற்றபடி அவர் ட்விட்டரை பெரிதாகக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் அவரைப் பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை மட்டும் மளமளவென்று உயர்ந்து 20 லட்சத்தைக் கடந்துவிட்டது. தமிழ் சினிமா ஹீரோக்களில் ட்விட்டரில் அதிக எண்ணிக்கையிலான ஃபாலோயர்களை வைத்திருப்பதில் ரஜினி முதலிடத்தில் உள்ளார்.
இந்த சாதனை ட்விட்டரில் ட்ரெண்டிங்காக முதலிடத்தில் உள்ளது.
Post a Comment