பஞ்சாயத்துக்கு ஆள் மாறிப்போச்சு… புது நாட்டாமை யாரு தெரியுமா?

|

அந்த ஆங்கில எழுத்து சேனலில் ஒளிபரப்பாகும் பஞ்சாயத்து நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. காரணம் சுவாரஸ்யமான வழக்குகள்தான். ஏழைமக்களின் கண்ணீரை டிவியில் போட்டு டி.ஆர்.பி ஏற்றினர். செய்தி வாசிப்பதில் சிறப்பு வணக்கம் வைத்தவர் சிலகாலம் நடத்திய அந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி ரேட்டிங் எகிறக் காரணம் கள்ளக்காதல், இருதார திருமணம், கணவன் சரியில்லை என வந்த வழக்குகள்தான். கணவன் மேல் புகார் வாசித்த மனைவி, மனைவி சரியில்லை என்று புகார் சொன்ன தாய் என குடும்ப பஞ்சாயத்து நாளுக்கு நாள் களை கட்டியது.

இந்த நிகழ்ச்சியில் நடந்த பஞ்சாயத்து மூலம் கொலையைக்கூட கண்டுபிடித்தார்கள். நாளொரு கதையும் பொழுதொரு சுவாரஸ்யமுமாய் போய்க்கொண்டிருந்த பஞ்சாயத்து காதல் விவகாரத்தில் காவல்நிலையம் வரை எட்டிப்பார்த்தது.

அப்புறம் என்ன நாட்டாமை தீர்ப்ப மாத்து என்று சொன்னது போய் நாட்டாமையையே மாற்றியது டிவி நிறுவனம். நடிகையான அந்த நாட்டாமை நடத்திய பஞ்சாயத்துக்கு ஆரம்பத்தில் ரசிகர்களிடையே வரவேற்பு குறைந்தாலும் அட இது கூட நல்லாத்தான் இருக்கு என்று நாளடைவில் ஏற்றுக்கொண்டார்கள்.

அந்த நாட்டாமை பேசிய டயலாக் வைரல் ஹிட் அடித்து ஊரையே கலக்கியது. ஊரெல்லாம் உன் பேச்சுத்தான் என்று நாட்டாமை புகழ் பரவியது. சினிமாவில் வசனம், பாடல்கள் கூட அந்த வசனத்தை வைத்து எழுதினர்.

அந்த வசனத்தையே தலைப்பாக வைத்து புது நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போகிறார் நாட்டாமை. சினிமாவில் படங்கள் இயக்குவதிலும் பிசியாகிவிட்டதால் பஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்துவதில் இருந்து விலகிவிட்டாராம் நாட்டாமை.

அவருக்கு பதிலாக இனி பஞ்சாயத்துப் பண்ணப்போகிறவர் நாட்டிய நடிகையாம். சீரியலில் வில்லியாக கலக்கும் புதிய நாட்டாமையின் பஞ்சாயத்து செல்லுபடியாகுமா? தீர்ப்பை ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Post a Comment