விடாது ஆவி… இல்லத்தரசிகளே உஷார்…

|

பெரியதிரையைத்தான் பேய்கள் பிடித்து ஆட்டுகிறது என்றால் சின்னத்திரையிலும் இனி பேய்களின் ஆதிக்கம் அதிகமாகிவிடும் போல இருக்கிறது. சூரிய டிவியில் இரவு பத்துமணிக்கு தினசரி பேய் வந்து போகிறது. இது பத்தாது என்று ஞாயிறு இரவு ரிலாக்ஸ் ஆக டிவி பார்க்கலாம் என்றால் அப்போதும் ஆவிகளின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. இதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இப்போது புதிய சேனலிலும் பில்லி, சூனியம் பேய்கதை சொல்லப்போகிறார்களாம். ஒரு ஊர் ரெண்டு ஊர் இல்லை ஏழு ஊர் பெண்களை பேய் பிடித்து ஆட்டப்போகிறதாம்.

இதில் பேய் பிடித்து ஆடப்போகிறவர்களில் ஆட்டோ ராணியும் அடக்கமாம். சினிமாவில் நடித்த இவர், சீரியலில் வில்லி அவதாராம் எடுத்தார். இப்போது பேய் பிடித்து ஆடப்போகிறார். அதோடு பாசமலரின் நாயகியாக அறிமுகமாகி பாதியில் போனவருக்கும் பேய் பிடிக்குமாம்.

அது சரி அப்போ பேயை ஓட்டப்போகிறவர்கள்? அவர்களும் நமக்கு பழக்கமானவர்கள்தான்... இதை எடுப்பதோ நட்சத்திர சேனல், சூரிய சேனல் என்று சுற்றி வந்த அழகுமயமான இயக்குநர்தானாம். அது சரி... ஒரு பேய் என்றாலே தாங்க முடியாது... ஏழு ஊர் பேயை எப்படி தாங்கப் போகிறதோ இந்த தமிழ் சமுதாயம். அது சரி எத்தனை நாளைக்குத்தான் அழுகையா பார்க்கிறது பேய் பிடித்து ஆடுவதையும் பார்ப்போமே என்று தைரியமாக தயாராகிவிட்டனராம் இல்லத்தரசிகள்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் டிவி சேனல்களை பேய்களும், பூதங்களும், ஆவிகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. மக்களுக்கு மூடநம்பிக்கையை வளர்க்காதீங்க... போதும் நிப்பாட்டுங்க... என்று கேஸ் போடும் அளவிற்கு போனது. இதையடுத்து கொஞ்சம் அடக்கி வாசித்தனர். இதனையடுத்து இதிகாசத் தொடர்கள் சேனல்களில் அதிகம் ஒளிபரப்பானது. ஆனால் தற்போது மீண்டும் பேய் கதைகள் டிவி சேனல்களை படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

அது சரி அழுது அழுது ரத்துக்கொதிப்பு வந்த மனைவிமார்களுக்கு இனி அச்சத்தில் காய்ச்சல் வராமல் இருந்தால் சரிதான் என்கிறது கணவர்களின் மைன்ட் வாய்ஸ்.

 

Post a Comment