கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் ரஜினி ரசிகர்கள் பரபரப்பாக தகவல் பரிமாறிக் கொண்டுள்ளனர். மீடியாவும் அடுத்தடுத்து ரஜினி பட செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படம் குறித்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ரஜினி அடுத்த மூன்றாண்டுகளில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கப் போவதாகவும், அதற்கான இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் அவர் முடிவு செய்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.
முதலில் அவர் கலைப்புலி தாணுவுக்கு ஒரு படம் நடித்துத் தரப் போகிறார் என்றும், அந்தப் படத்தை மெட்ராஸ் ரஞ்சித் இயக்குவார் என்று செய்தி வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.
இதற்கிடையில் லிங்கா படப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருப்பதால், அது சுமூகமாகவோ, சட்ட ரீதியாகவோ முடியும் வரை காத்திருக்குமாறு கூறிவிட்டார் ரஜினி. நாளை லிங்கா விவகாரம் பற்றி ரஜினியின் தூதுவர் எனப்பட்ட திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு அறிவிப்பை வெளியிடவிருக்கிறார். அத்துடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி விழும் என நம்பப்படுகிறது.
வரும் ஜூன் 10-ம் தேதிதான் ரஜினி - ரஞ்சித் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இன்று மாலையே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
Post a Comment