மதுரை: நடிகர் சங்கத்திற்கு சுயமாக நிதி திரட்டி புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பதவி மோகத்திற்காக நடிகர் சங்கத்தில் போட்டியிவில்லை என்று விஷால் கூறியுள்ளார். தங்களின் கோரிக்கைகளை சரத்குமார் அணி ஏற்றுக் கொண்டால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி, விஷால் அணி என இரண்டு அணிகள் போட்டியிட தயாராகியுள்ளது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும் போட்டியிடுகின்றனர். விஷால் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். விஷால் அணிக்கும் சரத்குமார் அணிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நாடக, நடிகர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக விஷால் தலைமையிலான அணியினர் இன்று மதுரை வந்தனர். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்கத்திற்கு தனி கட்டிடம் கட்ட ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் ஒப்புக் கொண்டால் இலவசமாக திரைப்படங்களில் நடித்து கட்டிடம் கட்டுவதற்கான நிதியை பெற்றுத் தருகிறோம் என தெரிவித்துள்ளார்.
எங்களின் கோரிக்கைகளை சரத்குமார் அணி ஏற்றுக்கொண்டால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட மாட்டோம். சரத்குமார் சொல்வதுபோல் இதில் அரசியல் கலப்பு எதுவும் கிடையாது என்று கூறினார். நாடக நடிகர்களைப் பற்றி மன்சூர் அலிகான் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் விஷால் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அருகில் நாசர், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
நடிகர் சரத்குமார் தலைமையிலான அணி நேற்று மதுரைக்கு சென்று ஆதரவு திரட்டினர் இந்த நிலையில் விஷால் தலைமையிலான அணியினர் இன்றைக்கு மதுரைக்குச் சென்றுள்ளனர்.
Post a Comment