ஹைதராபாத்: வேர் ஈஸ் வித்யா பாலன் அதாவது வித்யாபாலன் எங்கே என்னும் அர்த்தத்தில் வந்திருக்கும் தெலுங்குப் படம் இது. படத்தைப் பிரபலமாக்க இப்படி ஒரு தலைப்பை வைத்து விட்டு நாங்கள் வித்யா பாலனை தவறாக எதுவும் சித்தரிக்கவில்லை என்று பக்கம் பக்கமாக பேட்டி தட்டினார் படத்தின் இயக்குநர் ஸ்ரீநிவாஸ்.
ஆமாம் அவர் சொன்னதுபோல படத்தில் வித்யா பாலனைப் பற்றி ஒன்றும் இல்லை தான், அப்படியென்றால் படத்தின் கதை என்னவென்று கேட்கிறீர்களா படத்தின் நாயகன் காக்கிநாடா கிரண்(பிரின்ஸ்) பிடெக் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரிப் பையன் வருமானத்திற்காக ஒரு பீஸா கடையில் பீஸா டெலிவெரி செய்யும் பையனாக வேலை செய்கிறார்.
இவருக்கு டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் ஸ்வாதியுடன் காதல் (ஜோதி செட்டி). எல்லாம் சீராகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு சுபயோக தினத்தில் ஒரு கொலை முடிச்சில் மாட்டிக் கொள்கிறார்கள் நாயகனும், நாயகியும்.
இருவரும் அதிலிருந்து மீண்டு வந்தார்களா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ், நல்ல ஒரு விறுவிறுப்பான திரைக்கதையைக் கொடுத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநிவாஸ். மேலும் பண மோசடி, உறுப்புகளைக் கடத்துவது மற்றும் திருநங்கைகள் பற்றிய பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு, அதனைச் சாதுரியமாகக் கையாண்டு இருக்கிறார்.
படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது, அதனை ஈடு செய்யும் விதமாக இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று படத்தை சுவாரஸ்யமாக்கி விட்டனர்.
Post a Comment