சென்னை: தமிழ் சினிமாவில் காமெடியும் காதலும் சரிவிகிதத்தில் கலந்து நடித்துக் கொண்டிருந்த நடிகர் ஆர்யா, ஊரோடு ஒத்து வாழணும் என்ற பழமொழிகேற்ப தற்போது தமிழ் சினிமாவின் அடுத்த பேயாக அவதாரம் எடுக்கப் போகிறார்.
அறிந்தும் அறியாமலும் படத்தில் இயக்குநர் விஷ்ணுவர்தன் மூலமாக சினிமாவில் நுழைந்த ஆர்யா தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட.
ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்த அமர காவியம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜீவா ஷங்கர், தற்போதைய பேய் டிரெண்டுக்கு ஏத்த மாதிரி ஒரு கதையை ஆர்யாவிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையால் கவரப் பட்ட ஆர்யா, இதில் நான் நடிப்பதோடு சொந்தமாக எனது பேனரிலே தயாரிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.
மற்ற நடிகர், நடிகைகள் படத்தில் பணியாற்றும் டெக்னிஷியன்கள் தேர்வு முடிந்த பின் முறைப்படி படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்களாம்.
தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, இல்லையோ பேய்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. இதனைப் புரிந்து கொள்பவர்கள் நான் ஒரு முன்னணி ஹீரோ நான் எப்படி பேயாக நடிப்பது என்பது பற்றியெல்லாம் சிந்திப்பது கிடையாது, பேய் படமா பிடிங்க கால்ஷீட்டை என்று உடனடியாக தேதிகளை அள்ளிக் கொடுக்க தயாராகி விட்டார்கள்.
Post a Comment