எந்த நடிகரும், வேறு யாரும் தனது பெயரை விளம்பரத்துக்காகவும் வியாபாரத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காத ரஜினி, முதல் முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் லிங்குசாமிக்காக அனுமதி கொடுத்திருக்கிறார்.
லிங்குசாமியைப் பொருத்தவரை இந்தத் தலைப்பு, கிட்டத்தட்ட ரஜினியின் கால்ஷீட் கிடைத்ததற்கு சமம். இந்தத் தலைப்பே படம் பெரிய அளவில் வியாபாரமாக உதவியிருக்கிறது.
அஞ்சான், உத்தம வில்லன் ஆகிய படங்களால் பெரும் இழப்புக்குள்ளாகியிருக்கும் லிங்குசாமிக்கு, ரஜினி முருகன் பெரிய அளவுக்கு கைகொடுத்திருக்கிறது.
இந்தப் படத்தின் தலைப்புக்காக ரஜினியிடம் பேசிய அனுபவத்தை நேற்று நடந்த ரஜினிமுருகன் பிரஸ் மீட்டில் இப்படிச் சொன்னார் லிங்குசாமி:
"எடுத்த எடுப்பிலேயே இப்படத்திற்கு ரஜினிமுருகன் என்ற தலைப்புதான் வைத்தோம். தலைப்பில் ரஜினி சார் பெயர் இருப்பதால், ரஜினியிடம் இத்தலைப்பு குறித்து கூறிவிடலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக ரஜினியைப் பார்க்க அனுமதி கேட்டோம். அவர் இதற்கெல்லாம் ஏன் நேரில் வரவேண்டும், போனில் கூறுங்கள் என்றார்.
பின்னர் அவரிடம் நாங்கள் தயாரிக்கும் படத்திற்கு ‘ரஜினி முருகன்' என்று தலைப்பு வைத்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் உங்கள் பெயருக்கு இழிவு ஏற்படும் வண்ணம் நாங்கள் ஏதுவும் காட்சிகள் வைக்கவில்லை. உங்கள் பெயருக்கு எந்த அவப்பெயரும் வராது என்று சொல்ல ஆரம்பித்தேன். அதற்குள் அவர், "எதுவும் சொல்லவேண்டாம். உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது.. உங்களுக்கு உதவினால் சரி,' என்று கூறி தலைப்பை வைத்துக் கொள்ளச் சொன்னார்.
அவரது நம்பிக்கையை இந்தப் படம் நிச்சயம் காப்பாற்றும்," என்றார்.
Post a Comment