மேகியால் நொந்து நூடுல்ஸான மாதுரிக்கு வாய்ஸ் கொடுக்கும் நடிகர் ரிஷி கபூர்

|

மும்பை: மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித்திற்கு ஆதரவாக இந்தி நடிகர் ரிஷி கபூர் கருத்து தெரிவித்துள்ளார்.

நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் என்ற ரசாயன உப்பும், ஈயமும் இருப்பதை உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்தது. இதையடுத்து நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்து அது சத்தானது என்று கூறிய பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன் அவர் மீது பாரபங்கி வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். எதன் அடிப்படையில் மாதுரி மேகியை சத்தானது என்று கூறியது பற்றி 15 நாட்களுக்குள் விளக்கம் தெரிவிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இது குறித்து பாலிவுட் நடிகரும், நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையுமான ரிஷி கபூர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

யோசித்துப் பாருங்கள். ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பிராண்டை விளம்பரப்படுத்தியதற்காக அதற்கு மாதுரி தீக்சித் பொறுப்பு என்றால், டிவி சேனல்கள், ரேடியோ, விளம்பர பலகைகளும் தானே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment