என்ன நடந்தாலும் கவலைப்படாமல், எல்லாம் அவன் செயல் என தன் பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பவர் உச்ச நடிகர்.
மீடியாக்கள், அச்சுப் பத்திரிகைகள் அவரது பேட்டிக்கு தவம் கிடந்தாலும், யாரையும் நோகடிக்க வேண்டாமே என்பதற்காக யாருக்குமே பேட்டி தராமல், பொது விழாக்களின் தன் கருத்துகளைக் கூறி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அவர் சும்மா இருந்தாலும், பரபரவென பட வேலைகளைச் செய்தாலும் அட்டைப் பட கட்டுரைகள் அல்லது தலைப்புச் செய்திகளாக்கி தன் பிழைப்பை தக்க வைத்துக் கொள்கிறது மீடியா உலகம். அதுபற்றியெல்லாம் எப்போதும் அவர் அலட்டிக் கொள்வதுமில்லை.
ஆனால் தனது சமீபத்திய பட விவகாரத்தில் மீடியாவின் இன்னொரு முகம் பார்த்து படு அப்செட்டாகிவிட்டாராம். உண்மைக்கு சற்றும் சம்பந்தமில்லாத பல செய்திகளை யாரோ ஒரு முன்பின் அறிமுகமில்லாத நபர் கூறக் கூற அவற்றை தலைப்புச் செய்திகளாக்கி வருவதை வேதனையுடன் நண்பர்களிடம் குறிப்பிட்டாராம்.
கடந்த 40 ஆண்டுகளாக தன்னை, தன் பட வியாபாரத்தைப் பார்த்து வரும் மீடியா உலகம், குறைந்தபட்ச உண்மை என்னவென்பதை விசாரிக்காமல் கூட லிங்கா விவகாரத்தில் செய்தி வெளியிடுகின்றனவே என வருத்தப்பட்டாராம்.
இவரை விட பல மடங்கு வருத்தம் அவரது ரசிகர்களுக்கு. ஏற்கெனவே குறிப்பிட்ட இரு பத்திரிகைகளின் ஆயுள்கால சந்தாவைக் கூட ரத்து செய்துவிட்டு, கார சாரமாக அவற்றின் நிர்வாகங்களுக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.
தங்கள் தலைவருக்கு எதிராக தொடர்ந்து இந்த பத்திரிகைகள் செய்தி, கிசுகிசு பாணியில் மோசமான செய்திகளை வெளியிட்டால், அவற்றை சாலைகளில் குவித்து எரிக்கும் போராட்டத்தைத் தொடங்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.
Post a Comment