விவேக் நாயகனாக நடித்துள்ள காமெடிப் படமான பாலக்காட்டு மாதவன், அருள்நிதி நடித்த காமெடிப் படமான நாலு போலீசும் நல்லாருந்த ஊரும், பரஞ்சோதி, ஒரு தோழன் ஒரு தோழி, ஒரேஒரு ராஜா மொக்கராஜா ஆகிய ஐந்து படங்கள் ரிலீஸ் தேதியை ஒரு மாதம் முன்பே, ஜூலை 3 ரிலீஸ் என அறிவித்து விளம்பரங்கள் கொடுத்து வந்தன.
அதிலும் பரஞ்சோதி, ஒரு தோழன் ஒரு தோழி படங்கள் பத்திரிகையாளர்களுக்கும் போட்டுக் காட்டப்பட்டுவிட்டன.
இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் திடீரென பாபநாசம் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஜூலை 3 என அறிவித்துவிட்டனர்.
இதனால் மேற்கண்ட ஐந்து படங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நாலு போலீசும் நல்லாருந்த ஊரும் ஜூலை 31-க்குத் தள்ளிப் போக, மற்ற சிறு படங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனால் விவேக் நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் தயாரிப்பாளர் லாரன்ஸ் அசரவில்லை. 'ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை. அதே ஜூலை 3-ல் படத்தை வெளியிடுவேன்' என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் கடந்த மே மாதமே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, புரமோஷன் செய்து வருகிறேன். இப்போது திடீரென்று கமல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்துக்காக என் படத்தை தள்ளிப் போட்டால் எனக்குத்தான் ஏகப்பட்ட நஷ்டம் வரும்.
எனக்கு பாலக்காட்டு மாதவன் கதை, காமெடிக் காட்சிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. பாபநாசம் வந்தாலும், என் படம் அதன் சிறப்பான உருவாக்கத்துக்காக நிச்சயம் மக்களிடம் வரவேற்பைப் பெறும்," என்றார்.
Post a Comment