இந்த தமிழ்நாடுதான் என் தாய்நாடு.. இதை ஆந்திராவிலும் சொல்வேன்.. தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் உயிருள்ளவரை மறக்க மாட்டேன், என்றார் நடிகரும் அரசியல் பிரமுகருமான மோகன் பாபு.
பிரபல நடிகை ஜெயப்பிரதா, தன் சகோதரி மகன் சித்தார்த்தை நாயகனாக உயிரே உயிரே என்ற படத்தில் அறிமுகம் செய்கிறார். அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.
இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர் அமர் சிங், இந்தி நடிகர் அனில் கபூர், நடிகைகள் ராதிகா, ஸ்ரீபிரியா, சுமலதா, தெலுங்கு பிரமுகர் சுப்பாராமி ரெட்டி உள்பட பலரும் வந்திருந்து சித்தார்த்தை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் மோகன்பாபு பேசுகையில், "வந்திருக்கும் அனைவருக்கும், தமிழ் மக்களுக்கும் என் வணக்கம். நான் இந்த நிகழ்ச்சியில் தமிழில்தான் பேசுவேன். காரணம் எனக்கு பாலூட்டியது, சோறு போட்டு வளர்த்து ஆளாக்கியது இந்த சென்னையும் தமிழ் மக்களும்தான்.
தமிழ் மக்கள் நம்பி வந்த யாரையும் கைவிட்டதில்லை. ஆதரித்துக் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த சென்னையில் ஒரு சினிமாக்காரன், கையில் பைசா இல்லாமல் வாழ்ந்துவிட முடியும். கடைகாரர்கள் மளிகை சாமான் கொடுத்து உதவுவார்கள். ஆனால் உலகின் எந்த மூலையிலும் அப்படிப்பட்ட நல்ல மனசு கொண்டவர்களைப் பார்க்க முடியாது. ஆந்திராவில் சினிமாக்காரனுக்கு கடன்கூட கொடுக்க மாட்டார்கள்.
எனக்கு தாய்பூமி, தாய் நாடு என்றால் அது தமிழ்நாடுதான். இதை நான் ஆந்திராவிலும் கூட பல முறை சொல்லியிருக்கிறேன். எனக்கு பொய் பேசிப் பழக்கமில்ல. கடவுளுக்கு மட்டும் பயப்படுபவன், சாதாரண மனிதனுக்கு எதற்காக பயப்படப் போகிறேன்," என்றார்.
Post a Comment