சான் பிரான்சிஸ்கோ: ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 2015-ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் நடிகர் மாதவன்.
கனடா மற்றும் வட அமெரிக்காவில் செயல்படும் தமிழ் சங்கங்களின் தலைமை அமைப்பாகத் திகழ்வது ஃபெட்னா.
ஆண்டுதோறும் இந்த அமைப்பின் சார்பில் அமெரிக்கா அல்லது கனடாவில் விழா நடப்பது வழக்கம். இந்த விழாவில் தமிழ் சமூகத்தின் ஆளுமைகள் பலரும் பங்கேற்பார்கள். இலக்கிய, நாடக, இசை, சினிமா உலகைச் சேர்ந்த பலரும் வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக தமிழரின் நாட்டுப் புறக் கலைகள், தொன்மையான பறை இசை போன்றவற்றுக்கு இந்த விழாவில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
இந்த ஆண்டு ஃபெட்னா விழா கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் ஆடிட்டோரியத்தில் பிரமாண்டமாய் நடக்கிறது.
ஜூலை 2-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவின் முக்கிய விருந்தினராக, இலங்கையின் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்து கொள்கிறார். திரையுலகிலிருந்து நடிகர் மாதவன், நடிகை எமி ஜாக்ஸன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது தொகுத்து வழங்க, நடிகை ஜெயஸ்ரீ, பாடகி மகிழினி மணிமாறன், பாடகர்கள் ஆலாப் ராஜு, ஹரிசரண் உள்ளிட்டோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தவிர, பல்வேறு தமிழறிஞர்கள், சிறப்புத் திறனாளர்கள் சொற்பொழிவாற்றவிருக்கிறார்கள்.
ஃபெட்னா தமிழ்விழா தொடர்பான பல்வேறு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்கள் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துடன் தொடர்பிலிருங்கள்.
Post a Comment