சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் இயக்குநர் எல்ரெட் குமார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கௌதம் மேனனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஜீவா சமந்தா நடிப்பில் வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் படத்தை இயக்குவதற்கு கொடுத்த பணத்தில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி விட்டார் இயக்குனர் கௌதம் மேனன் என்பதுதான் அவர் மீதான புகாராகும்.
இதுகுறித்து எல்ரெட் குமார் மேலும் கூறியிருப்பதாவது:
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நீதானே என் பொன்வசந்தம் படத்தை தயாரித்தேன். அதற்காக எங்கள் நிறுவனத்திலிருந்து கெளதமின் போட்டான் கதாஸ் நிறுவனத்திற்கு 13 கோடியே 27 லட்சத்தை கொடுத்தது.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி இளையராஜாவை இசையமைப்பாளராகவும், முழு படத்தையும் இந்தியாவிலேயே எடுத்தும் முடித்து விட்டார் கெளதம். குறிப்பிட்ட கால அவகாசத்தில் படத்தையும் முடிக்கவில்லை. படமும் வெளியாகி தோல்வியடைந்தது.
நாங்கள் கொடுத்த பணத்தில் அடையாறில் வீடு ஒன்றை வாங்கிவிட்டார். பட செலவிற்கு 4 கோடி மட்டுமே செலவு ஆகியிருக்கிறது. மீதமுள்ள 8 கோடிக்கு வட்டியுடன் சேர்த்து 10 கோடியே 67 லட்சத்து 11,225 ரூபாய் கெளதம் எங்களுக்கு தரவேண்டும்.
இந்நிலையில் அவர் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் "தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்" படத்தை எங்களுக்கான தொகையை தரும்வரை வெளியிட தடைவிதிக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, " கெளதம் வாசுதேவ் 4 வாரத்துக்குள் எழுத்துப்பூர்வமான பதிலை தரவேண்டும். அதன் பிறகு வழக்கை விரைவில் விசாரித்து முடிக்கும் பட்டியலில் சேர்க்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.
Post a Comment