திருச்சி: அரசியலில் உள்ளவர்கள் நடிகர் சங்க பதவியில் இருக்கக்கூடாது என்ற மரபை மதித்து விஜயகாந்த் செய்ததைப் போல, சரத்குமாரும், ராதாரவியும்தான் பதவி விலக வேண்டும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட நடிகர் விஷால் நற்பணி மன்றம் சார்பில் 10 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்கள் கொடுத்து திருமணம் நடத்தி வைக்கும் விழா திருச்சியில் இன்று நடந்தது.
இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து, இலவச சீர்வரிசையையும் வழங்கி, பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''எனது ரசிகர்களை, எனது நண்பர்களாகவே நான் கருதுகிறேன். இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது எளிதல்ல. எனவே, உதவிகள் செய்து திருமணத்தை நடத்தி வைப்பதோடு நின்று விடக்கூடாது. அந்த ஜோடிகள் தொடர்ந்து எப்படி வாழ்கிறார்கள் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, புதுமாப்பிள்ளைகள் எனது 10 தங்கைகளையும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எனது மன்றம் செயல்படுகிறது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக கல்வி, திருமணம் போன்றவற்றுக்கான உதவிகள் செய்து வருகிறோம். இதை ஏன் இப்போது விளம்பரப்படுத்துகிறீர்கள் என சிலர் கேட்கலாம். இதை பார்த்து மற்றவர்களும் பிறருக்கு உதவ வேண்டும் என்றுதான் வெளிப்படுத்தி வருகிறோம்.
மதுரையில் உள்ள நாடக நடிகர்களுக்கு, நாங்கள் பதவிக்கு வருவதற்கு முன்பே கட்டடம் கட்டித் தருவோம் என நாசர், கார்த்தி, கருணாஸ், நான் ஆகியோர் கூறினோம். அதன்படியே பூஜையும் நடத்தப்பட்டு விட்டது.
அதேபோல், நடிகர் சங்கத்துக்கும் இப்போதுள்ளவர்கள் கட்டடம் கட்ட மாட்டார்கள். நாங்கள் பதவிக்கு வந்ததும் நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவோம். கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். இந்த போட்டியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.
சினிமாத்தான் எனக்கு சோறு போட்ட தெய்வம். எனவே, திருட்டு வி.சி.டி. உள்ளிட்ட சினிமாத்துறை பிரச்னைகள் எதுவானாலும், தவறை தட்டிக் கேட்பதில் முதல் ஆளாக இருப்பேன்.
அரசியலில் இருப்பவர்கள் நடிகர் சங்க பதவியில் இருக்கக்கூடாது என்ற மரபை மதித்து விஜயகாந்த் பதவி விலகினார். அதைப் போன்று சரத்குமாரும், ராதாரவியும் அவர்களாக தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
Post a Comment