ரசிகர்கள் இழுத்துத் தள்ளியதால் ஜெயம் ரவி காலில் சுளுக்கு!
ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் இழுத்துத் தள்ளியதால் நடிகர் ஜெயம் ரவி காலில் சுளுக்கு ஏற்பட்டது. அவர் போட்டிருந்த டி ஷர்ட்டும் கிழிந்தது.
ஜெயம் ரவி - ஹன்சிகா நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படம் நேற்று வெளியானது.
இந்தப் படம் ஓடும் தியேட்டர்களில், ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள படக்குழுவினருடன் கிளம்பினார் ஜெயம் ரவி.
ஆல்பர்ட் திரையரங்குக்குள் ஜெயம் ரவி நுழைந்ததுமே ரசிகர்கள் ஆரவாரமாக அவரை வரவேற்றனர். கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த ரவி, உள்ளே நுழைய முயன்றார். ஆனால் ஆர்வம் மிகுதியால் அவரைச் சூழ்ந்த ரசிகர்கள் அவர் கையைப் பிடித்து இழுத்தனர். சிலர் அவர் போட்டிருந்த டி ஷர்ட்டை பிடித்து இழுக்க அது கிழிந்து போனது.
அப்போது நிலை தடுமாறி தியேட்டர் படிகளில் கால் பிசகிவிட்டது. இதனால் கடும் வலியோடு திரும்பினார் ஜெயம் ரவி.
மாலை நடந்த பத்திரிகையாளர் காட்சிக்கு நொண்டியபடி வந்தார் ஜெயம் ரவி.
அப்போது இந்த சம்பவம் குறித்துப் பேசுகையில், "படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போனேன். செம்மையா வரவேற்பு கொடுத்தாங்க. சந்தோஷம், மகிழ்ச்சி. ரசிகர்களின் இந்த உற்சாகம்தான் படத்துக்குக் கிடைத்த வெற்றி. அதற்கு முன் இந்த வலி ஒரு பொருட்டே அல்ல," என்றார்.
Post a Comment