டியர் மினிஸ்டர்.. ஜல்லிக்கட்டு தடையை நீக்காதீங்க... லிங்கா நாயகி "சவுண்டு"!

|

மும்பை: லிங்கா பட நாயகியும், பாலிவுட் ஹாட் ஸ்டார்களில் ஒருவருமான சோனாக்ஷி சின்ஹாவுக்கு எதிராக தமிழகத்தில் ஒரு போராட்டக் களம் தயாராகி விட்டது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூடாது என்று அவர் குரல் கொடுத்துள்ளார். மேலும் காளை மாடுகளை பத்திரமாக பாதுகாக்குமாறும் அவர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. தென் தமிழகம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மஞ்சு விரட்டு, மாடு பிடி என்று பல பெயர்களில் இது நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெற முடியாமல் போனது.

Sonakshi Sinha stands against Jallikattu

இந்தத் தடையை நீக்கக் கோரி மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசும் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் தடை நீங்கும் என்று மத்திய அமைச்சர் ஜவடேகரும் சென்னை வந்திருந்தபோது கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக களம் குதித்துள்ளார் சோனாக்ஷி. டிவி்ட்டரில் இதுதொடர்பாக அவர் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் தடையை நீக்கக் கூடாது என்று கோரியுள்ளார்.

டியர் மினிஸ்டர், பிரகாஷ் ஜவடேகர், தயவு செய்து காளைகளைக் காப்பாற்றுங்கள், பத்திரப்படுத்துங்கள், ஜல்லிக்கட்டுத் தடையை நீடியுங்கள் என்று போட்டுள்ளார் சோனாக்ஷி.

மேலும் தனது செய்தியோடு, ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு வீடியோவையும் அவர் இணைத்துப் போட்டுள்ளார். அதில் விலங்குகள் சித்திரவதை செய்யப்படுவது போன்ற காட்சி உள்ளன.

இன்னொரு டிவிட்டையும் அவர் போட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீடிக்க தனது ரசிகர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், விலங்குகளை நேசிக்கும் ஒவ்வொருவரும், ஜல்லிக்கட்டு பழக்கத்தை அடியோடு தடை செய்ய அமைச்சருக்கு டிவிட் செய்யுங்கள். ஜல்லிக்கட்டை தடை செய் என்று போட்டுள்ளார் அவர்.

இன்னும் இதுபோல ஜல்லிக்கட்டை வைத்து மேலும் சில டிவிட்களையும் சோனாக்ஷி போட்டுள்ளார்.

அட, ஏம்மா நீங்க வேற.. பாஜகவே தேர்தல் ஆதாயத்திற்காக ஜல்லிக்கட்டை திரும்பக் கொண்டு வர முயற்சித்து வருகிறது. தேர்தல் நெருங்கும்போது தடையை தூக்க திட்டமிட்டு ஆறப்போட்டு வருகிறார்கள். இதில் உங்கள் சொல்லா அம்பலத்தில் ஏறப் போகிறது...!

 

Post a Comment