சென்னை: நடிகர் சூர்யா, கார்த்தியின் படங்களை மட்டுமே தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தற்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.
அதாவது தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கப் போகிறாராம். முன்பு மாதிரி தமிழ் சினிமாவின் நிலை தற்போது இல்லை, படம் தயாரிப்பதில் ஆரம்பித்து வெளியிடும் வரை தயாரிப்பாளரின் நிலை கத்தி மீது நடப்பது போன்று உள்ளது.
மாறிவரும் உலகில் ஒரு படம் இரண்டு வாரம் ஓடினாலே பெரிய வெற்றிப்படம் என்று விளம்பரப் படுத்தும் நிலையில் தான் தற்போதைய தமிழ் சினிமா உள்ளது. பல பிரச்சினைகளையும் தாண்டி படத்தை வெளியிடும் போது போதுமான அளவு தியேட்டர்கள் கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் தியேட்டர் உரிமையாளர்கள் வைத்தது தான் சட்டமாக உள்ளது.
பல சமயங்களில் இதனால் நல்ல தரமான படங்கள் கூட தியேட்டரை விட்டு விரைவிலே எடுக்கப் பட்டு விடுகின்றன. இந்த நிலை தொடர்வதை பலபேரும் விரும்பவில்லை என்றாலும், யாரும் இதற்குத் தீர்வு காணாத நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இதற்கு முடிவு காணும் விதமாக தியேட்டர்களை தற்போது குத்தகைக்கு எடுக்க உள்ளார்.
வாரத்துக்கு ஒருபடம் வீதம் தனது படங்களை வெளியிட உள்ளார், இதனைத் தவிர மற்றவர்களின் தயாரிப்பில் வெளிவரும் சிறந்த படங்களையும் வாங்கி தனது பேனரில் சொந்தமாக வெளியிடப் போகிறாராம்.
Post a Comment