ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் ருத்ரம்மா தேவி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படம் வெளியீட்டிற்குத் தயாராகி விட்டது.
சரித்திரப் பின்னணி கொண்ட இந்தப் படத்தில் அனுஷ்கா ராணியாக நடித்து இருக்கிறார், சரித்திரப் பின்னணியைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்திற்கு போட்டியாக இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி படமும் வெளியிடத் தயார் நிலையில் உள்ளது.
பாகுபலி மற்றும் ருத்ரம்மா தேவி இரண்டிலுமே அனுஷ்கா தான் நாயகி என்றாலும், ருத்ரம்மா தேவியை விட எல்லா விதத்திலும் பாகுபலி ஒருபடி மேலேயே உள்ளது. எனவே படத்தை எப்படியாவது விளம்பரப் படுத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ருத்ரம்மா தேவி இயக்குநர் குணசேகர், அதற்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை படத்திற்கு பின்னணிக் குரல் கொடுக்க வைத்திருக்கிறார்.
மிக நீண்ட வருடங்கள் கழித்து ஆட்டோ ஜானி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கும் மெகா ஸ்டார், ருத்ரம்மா தேவி படத்திற்கு குரல் கொடுத்திருப்பதால் கண்டிப்பாக அவரது ரசிகர்கள் படத்தைப் பார்ப்பார்கள். இதன் மூலம் சிரஞ்சீவி ரசிகர்கள் தவிர தெலுங்கு உலகின் தீவிர ரசிகர்களும் தற்போது ருத்ரம்மா தேவியில் மெகா ஸ்டாரின் குரலைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த முயற்சி வெற்றியடைந்ததில் இயக்குநர் குணசேகர் தற்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறாராம், மேலும் படம் வெளியிடுவதற்கு முன்பு இதைப் போன்ற சில அதிரடிகளையும் அரங்கேற்றத் திட்டமிட்டு உள்ளனராம் ருத்ரம்மா தேவி படக்குழுவினர்.
Post a Comment