மும்பை: பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் அகதிகள் நல்லெண்ணத் தூதுவராக (UNHCR) செயல் பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். சமீபத்தில் அவர் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த அகதிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
இலங்கை நாட்டைச்சேர்ந்த திவ்யா அவரது சகோதரி, சோமாலியன் நாட்டைச் சேர்ந்த பெர்லின், மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கஸ் மற்றும் சில ஆப்கானிய, ஈரானியக் கைதிகளுடன் அமர்ந்து கடந்த சனிக்கிழமை மதியம் ஜான் ஆப்ரகாம் உணவு அருந்தினார்.
அவர்களைச் சந்தித்து முடித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்தியா ஒரு மிகச்சிறந்த நாடு, ஆனால் அகதியான திவ்யாவும் அவரது சகோதரியும் தமிழ்நாடு அரசிடம் சிறப்பு அனுமதி பெற்ற பின்பே என்னைப் பார்க்க வந்தனர்.
அகதிகள் குறித்த முறையான மற்றும் முழுமையான ஒரு ஆவணப்படம் தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது, என்னுடைய படங்களின் மூலம் தொடர்ந்து நான் சமூகக் கருத்துக்களை வலியுறுத்தி வருகிறேன்.
ஏனெனில் சினிமா என்பது மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஒரு ஊடகம், எனவே சினிமாவின் மூலம் கருத்துக்களை கூறினால் அவை மக்களை முழுமையாக சென்றடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
2006 ம் ஆண்டில் என்னுடைய படப்பிடிப்புக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருந்த போது ஆப்கானிஸ்தானில் இருந்து நிறைய அகதிகள் வெளியேறுவதைக் காண முடிந்தது. அகதிகளின் உண்மை வாழ்க்கையானது மிகவும் துயரம் தரக்கூடிய ஒன்றாக உள்ளது," என்றார்.
ஜான் ஆப்ரகாமின் தயாரிப்பில் வெளிவந்த மெட்ராஸ் கபே திரைப்படமானது இலங்கை அகதிகள் மற்றும் ராஜீவ்காந்தி கொலை போன்றவற்றை பின்னணியில் வைத்து உருவானது. இதில் விடுதலைப் புலிகளையும் தமிழரின் போராட்டங்களையும் தவறாக சித்தரித்திருந்ததால், தமிழகத்தில் படத்தை வெளியிடக் கூடாது என தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அந்தப் படமும் வெளியாகவில்லை என்பது நினைவிருக்கலாம்.
Post a Comment