சர்ச்சையை ஏற்படுத்திய ஜோதிலட்சுமி அழைப்பிதழ்

|

ஹைதராபாத்: காதல் அழிவதில்லை என்று தமிழில் ஒரு படம் வந்ததே ஞாபகம் இருக்கிறதா?

அந்தப் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்த சார்மி தற்போது தெலுங்கு உலகின் மிகப் பெரிய நடிகையாக மாறி விட்டார். சிம்புவின் முதல் படஜோடி அல்லவா.. அதனால் சர்ச்சைகளில் சிக்குவதிலும் அவரைப் போலவே இருக்கிறார்.

தெலுங்கு உலகின் முன்னணி நடிகையாக வலம்வரும் சார்மி தற்போது ஜோதிலட்சுமி என்ற மங்களகரமான பெயரைக் கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது, அந்த அழைப்பிதழின் வடிவத்தைப் பார்த்தவர்களுக்கு லேசான அதிர்ச்சி. ஒரு பெண்ணின் பின் முதுகு ஜாக்கெட்டைப் போன்று வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அழைப்பிதழில் ஓபன் மீ தமிழில் சொல்வதானால் 'திறந்திடு' என்னை என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.

இப்படிக் கூடவா ஒரு அழைப்பிதழை வடிவமைப்பார்கள் என்று ஒரு பக்கம் கண்டனங்கள் எழுந்தாலும் மறுபக்கம் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது இந்த அழைப்பிதழ்.

சர்ச்சையின் மறுஉருவமான ராம் கோபால் வர்மா படத்தின் பெயருக்கு ஏற்றார் போலவே அழைப்பிதழ் இருக்கிறது என்று வழக்கம் போல ஒரு திரியைக் கிள்ளிப் போட்டிருக்கிறார் தனது ட்விட்டர் பக்கத்தில். படத்தை இயக்குவது தெலுங்குலகின் மெகா ஹிட் இயக்குநர் பூரி ஜெகன்நாத். இவரின் இயக்கத்தில் கிட்டத் தட்ட டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் டூயட் பாடிவிட்டனர், தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஆட்டோ ஜானி படத்தை இயக்குவதும் பூரி ஜெகன்நாத்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

 

Post a Comment