சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் படுவேகமாக நடப்பதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.
ஒரு காலத்தில் முட்டி மோதிய சிம்புவும், தனுஷும் தற்போது நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். ட்விட்டரில் அண்ணா, தம்பி என்று இருவரும் பாசமாக பேசிக் கொள்கிறார்கள். இந்நிலையில் தான் சிம்பு தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் குறித்து அறிந்த பலரும் சிம்புவும், செல்வராகவனுமா படம் வெளங்கிடும். ஒரு பக்கம் செல்வா படத்தை முடிக்க 2 ஆண்டுகளாக்கிவிடுவார். மறுபக்கம் சிம்புவோ படப்பிடிப்புக்கே வர மாட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றினால் அந்த படம் நிச்சயம் தற்போதைக்கு முடியாது என பலர் கிண்டல் செய்தார்கள்.
இந்நிலையில் தான் கிண்டல் செய்தவர்களை வெட்கி தலை குனிய வைத்துள்ளனர் சிம்புவும், செல்வாவும். ஆமாம், முதல்கட்ட படப்பிடிப்பை 12 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டு வெறும் 9 நாட்களிலேயே முடித்துவிட்டனர்.
சிம்பு, செல்வராகவன் ஆகியோரால் கூட தீயாக வேலை செய்ய முடியுமா என்று கோலிவுட்டில் பலரும் தற்போது வியந்து வருகிறார்கள்.
Post a Comment