நடிகர் சங்கத்தில் இருந்து நாடக நடிகர்களை நீக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ராதாரவியும் காளையும் திருச்சியில் நடந்த கூட்டமொன்றில் சினிமாக்கார நாய்கள் என்று பேசி உள்ளனர். விஷாலையும், நாசரையும் திட்டி உள்ளனர்.
நடிகர்களை நாய்கள் என்று பேசிய ராதாரவியும், காளையும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்கள். எனவே இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறேன்.
நடிகர் சங்கத்தில் மூவாயிரம் நாடக நடிகர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இப்போது நாடகம் எங்கே நடக்கிறது... இவர்களை ஏன் உறுப்பினர்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கத்தில் இருந்து அனைத்து நாடக நடிகர்களையும் நீக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக சினிமா நடிகர்களை மட்டும் உறுப்பினர்களாக்க வேண்டும். நாடக நடிகர்களை நீக்கி விட்டுத்தான் தேர்தலை நடத்த வேண்டும். இந்த நாடக நடிகர்களை வைத்துக் கொண்டுதான் தேர்தல் முடிவுகளை தங்கள் இஷ்டப்படி மாற்றுகிறார்கள்.
நடிகர் சங்கத்தில் தலைவர் நல்லவர். அவரை யாரும் எதிர்க்கவில்லை. ராதாரவி, காளையைத்தான் எதிர்க்கிறோம்.
நடிகர் - நடிகைகளுக்கு மத்திய அரசு விதித்த சேவை வரியை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நடிகர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதற்கு ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் செலவு ஆனதாக ராதாரவி கணக்கு எழுதி உள்ளார். இவ்வளவு செலவு செய்ததற்கு பதிலாக பேசாமல் சேவை வரியையே கட்டி இருக்கலாம்.
நடிகர்-நடிகைகளுக்கு நடிப்பு திறன் வளர்க்கும் பயிற்சிக்கு ரூ. 33 லட்சம் செலவானதாக கணக்கு காட்டி உள்ளார். ராதாரவி யாருக்கு நடிப்பு திறன் பயிற்சி அளித்தார் என்பதை எனக்கு தெரிவிக்க வேண்டும்," என்றார்.
Post a Comment