சென்னை: நடிகை குஷ்பூ வைபவ்- ஐஸ்வர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை தனது அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கிறார்.
வழக்கம் போல இந்தப் படத்தை இயக்குவது அவரது கணவர் சுந்தர்.சி அல்ல, மாறாக புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கலாம் என்று ஒரு பேச்சு தற்போது கோடம்பாக்கத்தில் அடிபடுகிறது. இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்த வைபவ், மங்காத்தா படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் நடிக்கத் தெரிந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.
மங்காத்தா படத்தின் மூலம் வெறும் பெயர் மட்டும்தான் கிடைத்தது, புதிய படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பின் சோலோ ஹீரோவாக வைபவ் நடித்து வெளிவந்த கப்பல் திரைப்படத்தைப் பார்த்த, இயக்குநர் ஷங்கர் கப்பல் படத்தால் கவரப்பட்டு இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டார். கப்பல் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
கப்பல் படத்திற்குப் பின் குஷ்பூ தயாரிக்கும் புதிய படத்தில் வைபவிற்கு வாய்ப்பு வந்தது, எனினும் அது தள்ளிப் போனதால் வைபவ் சுந்தர்.சியின் ஆம்பள படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தார். இதில் கவரப்பட்ட குஷ்பூ தற்போது தனது அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வைபவை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
ஏற்கனவே தனது நிறுவனம் சார்பில் கிரி, ரெண்டு, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, நகரம் மறுபக்கம் போன்ற படங்களைத் தயாரித்த குஷ்பூ வளர்ந்து வரும் ஹீரோவை வைத்து ஒரு படம் தயாரிப்பது இதுவே முதல்முறை.
இந்தப் படத்தில் வைபவிற்கு ஜோடியாக ரம்மி படப் புகழ் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்த பின்னர் படத்தைப் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகுமாம்.
வழக்கம் போல இந்தப் படத்திலும் குஷ்பூவுக்கு கெஸ்ட்ரோல் இருக்குமா...!
Post a Comment