ஹைதராபாத்: அடுத்த மாதம் வரவிருக்கும் ரம்ஜான் தினத்தன்று ரம்ஜானின் ஸ்பெஷல் பிரியாணிக்கு போட்டியாக, ஏகப்பட்ட படங்களும் வெளியாகி ரம்ஜான் தினத்தை சந்தோஷப் படுத்தப் போகின்றன. ஆமாம் தமிழில் நடிகர் தனுஷின் மாரி, தெலுங்கில் மகேஷ்பாபு வின் ஸ்ரீமந்துடு மற்றும் ஹிந்தியில் சல்மானின் பஜ்ரங்கி பைஜான் போன்ற மூன்று படங்களும் திரைக்கு வரவிருக்கின்றன.
இதில் தமிழில் மட்டும் மாரி படத்துடன் உலக நாயகனின் பாபநாசம், மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் போன்ற படங்களையும் சேர்த்து மொத்தம் மூன்று படங்கள் மேலும் இந்தியில் ஒன்று மற்றும் தெலுங்கில் ஒன்று என 5 படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.
உலக அளவில் எதிர்பார்ப்புகளை உண்டாகியிருக்கும் பாகுபலி படம் ஒரு வாரம் முன்பே வெளியாகி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் கணிசமான தியேட்டர்களை கைப்பற்றி விடும். பாகுபலி படத்தை திரையிட்டது போக மீதமுள்ள தியேட்டர்களே மற்ற நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் என்பதால், மீதமுள்ள தியேட்டர்களை கைப்பற்ற மற்ற படக்குழுவினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
தியேட்டர்கள் தவிர்த்து வசூலிலும் பாகுபலியின் பங்கு அதிகம் இருக்கும், எனவே பாகுபலி படத்தைப் பொறுத்தே மற்ற நடிகர்களின் படவசூல் அமையும் என்பதால் பாக்ஸ் ஆபிசில் பாகுபலி படத்திற்கு அடுத்த இடத்தை எந்த நடிகரின் படம் பிடிக்கப் போகிறது என்னும் கேள்விக்கு விடையை எதிர்நோக்கி மும்மொழிகளின் திரையுலகத்தினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Post a Comment