சென்னை: தமிழ் சினிமா படக் காட்சிகளை மிஞ்சும் வண்ணம் நாள்தோறும் நிஜக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருகின்றன நடிகர் சங்கத்தில்.
தொடர்ந்து மூன்று முறை நடிகர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப் பட்டு தற்போது பதவியில் இருக்கும் நடிகர் சரத்குமார், சொன்னது போல நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டவில்லை. இதனால் விஷால் உள்ளிட்ட இளம் நடிகர்கள் தற்போது சரத்குமாருக்கு எதிராக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமார் போட்டியிட அவரை எதிர்த்து விஷாலின் அணியில் இருந்து நடிகர் நாசர் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகின. நடிகர் விஷாலிடம் சரத்குமார் சற்று கடுமையாக நடந்து கொண்டதைக் கண்டித்து நாசர் ஏற்கனவே அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில் நாசர் துணிச்சலாக சிலக் கேள்விகளை கேட்டிருந்தார், அவரின் துணிச்சலைக் கண்ட சீனியர் நடிகர்கள் முதல் ஜூனியர் நடிகர்கள் வரை அனைவரும், நாசர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் அவருக்கே தங்கள் ஆதரவை அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதைக் கண்டு பொறுக்க முடியாத யாரோ சில மர்ம நபர்கள் நாசருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஆபாசமாகவும் திட்டியுள்ளனர்.
இதனை தாங்க முடியாத நாசர் தனது சக நடிகர்களிடம் சொல்லி வருத்தப்பட, விஷயம் விஷாலின் காதுக்கு எட்டி தற்போது இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனராம் விஷாலின் அணியைச் சேர்ந்தவர்கள்.
இன்னும் என்னென்ன அதிரடிகளைப் பார்க்கப் போகிறோமோ!
Post a Comment