இறுதி செட்டில்மென்ட்.. முடிவுக்கு வருகிறது லிங்கா விவகாரம்!

|

ரஜினி நடித்த லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு கோரி வந்த திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நாளை இறுதி செட்டில்மென்ட் நடக்கும் எனத் தெரிகிறது.

இத்தோடு லிங்கா பிரச்சினை முடிவுக்கு வருகிறது.

லிங்கா படம் வெளியாகி, பெரிய அளவில் ஓபனிங் வசூலைக் குவித்தாலும், அளவுக்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கணக்கு காட்டினார்கள்.

Lingaa issue to be settled tomorrow

இது தொடர்பாக பல கட்டப் போராட்டங்கள், தினசரி பிரஸ் மீட்டுகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் ரூ 12.5 கோடியை விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தர ரஜினியின் பரிந்துரையின்பேரில் தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.

அந்தத் தொகையில் பாதியை மட்டும் ஒரு பிரிவினருக்கு கடந்த மாதம் தந்தனர். மீதியை பிறகு தருவதாகக் கூறிய நிலையில், அதை உடனே தரவேண்டும் என்றும், மேலும் ஒரு பெரிய தொகை வேண்டும் என்றும் மீண்டும் கோஷம் போட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், முன்பு பேசிய ஒப்பந்தம் போடப்பட்டபடி ரூ 12.5 கோடியில், தரப்படாமலிருந்த மீதித் தொகையை நாளை விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், கலைப்புலி தாணு முன்னிலையில் பிரித்துத் தருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செட்டில்மென்ட்டுக்குப் பிறகு லிங்கா விவகாரம் முழுமையாக முற்றுப் பெறும்.

சிங்காரவேலனுக்கு தடை

இன்னொரு பக்கம், லிங்கா விவகாரத்தை இத்தனை மோசமான பிரச்சினையாக்கியது மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை மிரட்டியது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லிங்கா விநியோகஸ்தர் சிங்கார வேலனுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை என தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட கூட்டமைப்பு ஆகியவை முடிவு செய்துள்ளன. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

 

Post a Comment