வெளியான ஐந்தே நாட்களில் ரூ 200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி.
இந்தியாவிலேயே வேறு எந்த சினிமாவும் இந்தப் பெருமையைப் பெற்றதில்லை என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளது இந்தப் படம்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பாகுபலி படத்தை உலகமே பாராட்டி வருகிறது. விடுமுறை தினங்களில் மட்டுமல்லாமல், வார நாட்களான திங்கள், செவ்வாயிலும் குறையாத கூட்டத்துடன் படம் ஓடுகிறது.
படம் வெளியான வெள்ளிக்கிழமையை விட, திங்கள் செவ்வாயில் அதிக வசூல் குவிந்துள்ளது, பாக்ஸ் ஆபீஸை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த 5 நாட்களில் ரூ 215 கோடிக்கு மேல் குவித்துள்ளது பாகுபலி. இந்தப் படம் நேரடியாக வெளியான தமிழ், தெலுங்கில் வரலாறு காணாத வரவேற்பைப் பெற்றுள்ளது. டப் செய்யப்பட்ட இந்திப் பதிப்பும் நல்ல வசூலைத் தருகிறது.
இந்திப் பதிப்பை வெளியிட்டுள்ள இயக்குநர் கரண் ஜோஹர், "எப்போது ஒரு படம் வெள்ளிக்கிழமையை விட திங்கள்கிழமை அதிக வசூல் பெறுகிறதோ.. அப்போதே அது பாக்ஸ் ஆபீஸில் தனி வரலாறு படைத்துவிட்டதாக அர்த்தம். பாகுபலி புதிய சாதனைப் படைத்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment