ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகுபலி படம் திரையிடப்பட்ட 3 தியேட்டர்களில் அதிக விலை வைத்து மக்களிடம் பணத்தைக் கறந்ததால் அந்தத் தியேட்டர்களை இழுத்து மூட சப் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஒசூரில் ஐந்து தியேட்டர்கள் உள்ளன. இதில் சீனிவாசா என்ற தியேட்டர் லைசென்ஸே இல்லாமல் செயல்பட்டு வந்தது. இதையடுத்து இந்தத் தியேட்டரை சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து விட்டனர்.
இதையடுத்து மற்ற நான்கு தியேட்டர்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தத் தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மிக அதிகமாக புதுப் படங்களுக்கு வசூலிப்பதாக மக்கள் குற்றண் சாட்டி வந்தனர். இதுதொடர்பாக சப் கலெக்டர் டாக்டர் செந்தில் ராஜுக்கும் புகார்கள் குவிந்தன.
இதையடுத்து சப் கலெக்டரே அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். பாகுபலி படம் திரையிடப்பட்ட ராகவேந்திரா, ஸ்ரீலட்சுமி தேவி, பாலாஜி ஆகிய தியேட்டர்களுக்கு சாதாரணமான முறையில் ஜனங்களோடு ஜனமாக போய் டிக்கெட் வாங்கினார். அப்போது 100 ரூபாய் அதிகம் வைத்து டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து 3 தியேட்டர்களிலும் படம் திரையிடுவதை நிறுத்த உத்தரவிட்டார். மேலும் இந்தத் தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அவர் பரிந்துரை செய்தார்.
Post a Comment