ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் கர்நாடகத்தில் மட்டும் ரூ 50 கோடிக்கு மேல் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன் வேறு எந்தப் படமும் கர்நாடகத்தில் இவ்வளவு வசூலை எட்டியதே இல்லை.
பாகுபலி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடிப் படமாகவும், மலையாளம், இந்தியில் டப் செய்யப்பட்டும் வெளியானது.
இந்த நான்கு மொழிகளிலும் கர்நாடகத்தில் பாகுபலி வெளியானது. மொத்தம் 184 சென்டர்களில் வெளியான இந்தப் படத்தைப் பார்க்க தலைநகர் பெங்களூரு மட்டுமல்லாமல், கர்நாடகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். வடக்கு கர்நாடகத்தில் கூட இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.
இந்தப் படம் வெளியாகி 19 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரூ 50 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது கர்நாடகத்தில் மட்டும்.
வேறு எந்த மொழிப் படமும் அங்கு இவ்வளவு வசூலைக் குவித்ததில்லை. கன்னட மொழியில் வெளியாகாத ஒரு படத்துக்கு இவ்வளவு வசூலா என பிரமிக்கின்றனர் கன்னட திரையுலகினர்.
பாகுபலி ஜுரம் இன்னும் கூட அங்கு தணியவில்லை. இதனாலேயே பல கன்னடப் பட வெளியீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரணதந்திரம் (கன்னடம்) பட இயக்குநர் ஆதிராம் தெரிவித்தார்.
Post a Comment