சென்னை: மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் உடலுக்கு ஏராளமான திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கண்ணீர் அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், எனக்கு தொழில் கற்றுக்கொடுத்த கடவுள் எம்.எஸ்.வி, நான் முன்னேற எனக்கு துணை நின்றவர் என்று கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். எனினும் எம்.எஸ்.விஸ்வாநனின் உடல்நிலை மோசம் அடைந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4:15 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. அவருடைய உடல் சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் இருந்தே திரை உலக பிரமுகர்களும், ரசிகர்களும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ஒய்.ஜி மகேந்திரன், பிரபல பாடகி வாணி ஜெயராம் ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினர்.
நீண்ட காலமாக எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றிய சங்கர் கணேஷ், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை.
எத்தனையோ ஜாம்பாவான்களை அவரோட இசையில பாட வச்சிருக்கார். பாசமலர்ல இருந்து பெர்மனென்டா அவர் கூடவே இருக்கேன். எங்கே போனாலும் என்னை கூட்டிக்கொண்டு போவார். இசையமைப்பது, மிக்சிங், ரீ ரிக்காட்டிங் என பலவிசயங்களை நுணுக்கமாக கற்றுக்கொடுத்தார். எனக்கு தொழில் கற்றுக் கொடுத்த தெய்வம் அவர், வாழ்க்கை பிச்சை போட்டவர் என்று கண்ணீர் மல்க கூறினார் சங்கர் கணேஷ்.
Post a Comment