ராமானுஜர் பாக்குறயா? கேட்கும் கருணாநிதி... நழுவும் மாஜிக்கள்

|

கலைஞர் தொலைக்காட்சியில் கருணாநிதியின் கை வண்ணத்தில் உருவான ராமானுஜர் காவியம் ஒளிபரப்பாகிறது. இதுவரை 25 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிவிட்டது. ஒவ்வொரு எபிசோடும் சுவாரஸ்யங்களுடன் செல்கிறது. இந்த தொடரை திமுகவினர் பார்க்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறாராம் கருணாநிதி.

மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜரின் பிறப்பு தொடங்கி அவரது வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை தன்னுடைய பாணியில் அழகான வசனங்களுடன் கூறி வருகிறார் கலைஞர் கருணாநிதி.

Ramanujar Serial telecast on Kalaignar TV

அவ்வப்போது சின்னச் சின்ன நையாண்டி வசனங்களும் இடம் பெறத் தவறுவதில்லை. ராமானுஜரின் ஜாதகம் பார்க்கும் காட்சியில் ஒரு பாட்டி, தன்னுடைய மலரும் நினைவுகளை கூறும் தருணத்தில், "தான் வெங்கடேசனை பெற்றேடுத்தேன் என்று கூற "திருமலை வெங்கடேசனா பாட்டி?" என்று கேட்கிறார் ஒருவர். "இல்லை இல்லை... என் மகன் வெங்கடேசன்" என்று கூறுகிறார் பாட்டி.

அதற்கு அவரோ, " பாட்டி, வெங்கடேசனைத் தொடர்ந்து வரதராஜன், திருவரங்கன், ஆதிகேசவன் என்று வேறு யாரையும் பெற்றெடுக்கவில்லையா பாட்டி?" என்று கேட்கிறார்.

ஏன் இல்லை அடுத்தடுத்து 9 ஆண்டுகளில் 9 ஆண்சிங்கங்களை பெற்றெடுத்தேன் என்று கூறி பெருமிதப்படுகிறார். உடன் அவர் தன்னுடைய மனைவியிடம், பெரியபிராட்டி, "திருமணமானதில் இருந்து குழந்தைகளை பெற்றெடுப்பதையே இந்த பெண் சிங்கம் முழுநேர வேலையாக செய்திருக்கும் போலிருக்கிறதே என்று கூறி நையாண்டி செய்கிறார்.

Ramanujar Serial telecast on Kalaignar TV

உலகம் போற்றும் உத்தமர்

தொடர்ந்து ராமானுஜரின் ஜாதகத்தைக் கணித்த மாமா, ராமானுஜர் ஊர் போற்றும்படி மட்டுமல்ல உலகமே போற்றும்படி இருப்பார் என்று கூறி பெற்றோர்களையும், உறவினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துக்கிறார்.

தெய்வக்குழந்தை

"ராமானுஜன் சாதாரண குழந்தையல்ல எண்ணெய் ஆடும் செக்கில் இருந்து தெறித்து விழுந்த எள்" என்று ஜாதகம் கணித்துக்கூறுகிறார் பெரியப்பா.

இவன் பெரிய பரோபகாரியாக இருப்பான். மனிதர்களுக்கு இடையே உள்ள பேதங்களை களைய வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பான் என்றும் கூறுகிறார் ஜாதகம் கணித்தவர்.

ராமானுஜரின் விருப்பம்

ராமானுஜரின் எதிர்காலத்தில் என்னவாக வருவார் என்பதை அறியவும் அவரது விருப்பம் எது என்று அறிந்து கொள்ள ஒரு சோதனை வைக்கின்றனர். ஒரு தட்டில் கொழுக்கட்டை, ஒரு தட்டில் தானியங்கள், ஒரு தட்டில் பொன் நகைகள், ஒரு தட்டில் திவ்ய பிரபந்தம் என குவித்து வைத்திருக்கின்றனர். இதில் ராமானுஜர் எதை எடுப்பார் என்பதை ஆவலுடன் பார்க்க ராமானுஜரோ தன்னுடைய பிஞ்சுப் பாதங்களால் நடந்து சென்று திவ்ய பிரபந்தத்தை எடுக்கிறான். உடனே அனைவருமே மகிழ்ச்சியடைகின்றனர்.

விழிக்கும் மாஜிக்கள்

ராமானுஜரின் கதைக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று இதனை எழுதும் கருணாநிதிக்கு தனி ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் தன்னை சந்திக்கும் மாஜி அமைச்சர்களைப் பார்த்து டிவியில் ராமானுஜர் தொடர் பாக்குறயாயா? என்று கேட்கிறாராம் கருணாநிதி.அதைக் கேட்டு விழிக்கும் மாஜிக்கள் இல்லை தலைவரே இனிமேல் பார்க்கிறோம் என்று கூறி தப்பித்து விடுகின்றனராம்.

Ramanujar Serial telecast on Kalaignar TV

நழுவும் மாஜிக்கள்

திமுகவினர் பலரும் ராமானுஜர் பார்ப்பதில்லை என்பதால் தலைவர் நம்மை கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்து, அறிவாலயம் போனாலும் கருணாநிதியின் பார்வையில் படாமல் போய்விடுகிறார்களாம். மானாட மயிலாட பற்றி கேட்டால் மாஜிக்கள் சொல்லியிருப்பார்களோ என்னவோ? ராமானுஜரை பார்க்க அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது?

 

Post a Comment