பேச்சுவார்த்தை தோல்வி... படப்பிடிப்பு ரத்து தொடர்கிறது.. தவிக்கும் தயாரிப்பாளர்கள்!

|

சென்னை: பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கிடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், படப்பிடிப்பு ரத்தை மேலும் நீட்டித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

பெப்சி தொழிலாளர்கள் திடீரென சம்பள உயர்வை தன்னிச்சையாக அறிவித்ததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள் உள்நாடு - வெளிநாடுகளில் நடக்கும் அனைத்து படப்பிடிப்பு மற்றும் இதர வேலைகளை ரத்து செய்தனர். அதன்படி, நேற்று கமல், அஜீத் உள்ளிட்ட நடிகர்களின் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

சென்னை

சென்னை மற்றும் வெளியூர்களில் நடந்த தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதே போல் வெளிநாடுகளில் நடந்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சங்க நிர்வாகிகளுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகளுக்கும் இடையே சென்னையில் உள்ள ‘பிலிம் சேம்பர் கட்டிடத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை நடைபெற்றது. அதில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது போல் ‘எடிட்டிங்', ‘டப்பிங்', பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகளும் நிறுத்தப்பட்டன. இதனால் தமிழ் பட உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மூத்த தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தயாரிப்பாளர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்கள். இன்றும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

 

Post a Comment