பெப்சி அமைப்புடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்தால், நாளை முதல் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (பெப்சி) இணைந்துள்ள தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக, தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இக்கோரிக்கைகள் தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் வரையில் படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்தது. அதன்படி, 27-ம்தேதி முதல் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், பெப்சி நிர்வாகிகளுக்கும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்குமிடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சம்பளப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றதால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற யூனியன்கள் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தாலும், சண்டைப் பயிற்சியாளர்களுக்கான சம்பள உயர்வு விஷயத்தில் இன்றும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதையும் முடித்து வைக்க முயற்சி தொடர்கிறது.
Post a Comment