அரசியலுக்கு வந்தால் நடிப்பை தொடரக் கூடாது! - நடிகர் விவேக்

|

சென்னை: எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. அதில் இல்லாமலேயே கூட மக்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் ஒருவேளை வந்தால், நடிப்பதை விட்டுவிடுவேன், என்றார் நடிகர் விவேக்.

லாரன்ஸ் தயாரிப்பில், சந்திரமோகன் இயக்கத்தில் விவேக் நாயகனாக நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகளைப் பார்த்த திரையுலகினர் விவேக்கைப் பாராட்டியுள்ளனர்.

Vivek talks about his political entry

படம் குறித்து செய்தியாளர்களிடம் விவேக் பேசுகையில், "ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பதில்லை. எனக்கு ஏற்ற கதைகள் வந்தால் நாயகனாக நடிப்பேன். இல்லாவிட்டால் காமெடி நடிகராகத் தொடர்வேன். இப்போது காஷ்மோரா என்ற படத்தில் காமெடியனாக மட்டுமல்ல, நல்ல குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறேன்.

இதுவரை 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன். ஒரு கோடி என்ற இலக்கை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன். இந்தப் பணியில் நான் இறங்கிய பிறகு, பல விஷயங்களை மறந்துவிட்டேன். அத்தனை சந்தோஷமான பணி இது. ஒரு முறை டாக்டர் அப்துல் கலாம், "என்ன விவேக்... உங்க தொழிலைக் கூட மறந்துவிட்டு, மரம் நடும் பணியில் தீவிரமா இருக்கீங்களாமே?" என்று கேட்டார்.

அரசியலுக்கு வரும் யோசனை இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு அனைத்து கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு ஒரு உதவி வேண்டும் என்றால் அவர்கள் மூலம் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், நடிப்பதைத் தொடரமாட்டேன். இரண்டு வண்டியில் சவாரி செய்யக் கூடாது என்பது என் கருத்து," என்றார்.

 

Post a Comment