மும்பை: ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே கொண்டாடிக் கொண்டு இருக்கும் படமாக பாகுபலி மாறியிருக்கிறது, வெளியான நாள் முதலே வசூலில் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது படம்.
இன்னும் 1 மாத காலத்திற்கு பகுபலியின் தாக்கம் இந்தியாவில் இருக்கும் என்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். பாகுபலி படம் இந்தியா முழுவதும் வெளியானதால் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருந்த பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வரும் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஹிந்தியில் சல்மானின் படங்களுக்கு எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆனால் இந்தமுறை அந்த எதிர்பார்ப்பு பாகுபலியால் தடைபட்டு இருக்கிறது, ஆமாம் பாகுபலி திரைப்படம் ஹிந்தி மொழியில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனால் பல மல்டிபிளக்ஸ் அரங்குகளில் சல்மான்கானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் தயங்குகிறார்கள், பாகுபலியால் நல்ல லாபம் கிடைத்து வருகிறது.
அப்படி இருக்கும்போது பஜ்ரங்கி பைஜானை எப்படித் திரையிட முடியும், என்று கேள்வி எழுப்புகின்றனர். இதனால் எதிர்பார்த்த திரையரங்குகள் சல்மானின் பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
அப்படியே திரையரங்குகள் கிடைத்தாலும் சல்மான் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Post a Comment