பெப்சி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் 'படப்பிடிப்பு ரத்து' அறிவிப்பைத் தொடர்ந்து கமல், அஜீத், சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வரும் படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பெப்சி அமைப்புடனான சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படும் வரை எந்தப் படப்பிடிப்பும் நடக்காது, பெப்சி தொழிலாளர் யாரையும் வைத்து பணியாற்ற முடியாது என்பதில் தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக உள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஹைதராபாத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தூங்காவனம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் கொல்கத்தாவில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் சூர்யா நடித்து வரும் ‘24‘ என்ற படத்தின் படப்பிடிப்பு, பல்கேரியா நாட்டில் நடந்து வந்த பெயர் சூட்டப்படாத கார்த்தி படத்தின் படப்பிடிப்பு மற்றும் சென்னையில் விஜய்சேதுபதி நடித்து வரும் ‘இறைவி' ஆகிய படத்தின் படப்பிடிப்பு உள்பட 30 தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும், பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகளுக்கும் இடையே சென்னையில் உள்ள பிலிம் சேம்பரில் இன்று(திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்றாவது முடிவுக்கு வருமா பிரச்சினை என திரையுலகம் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.
Post a Comment