சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மகன் மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளானதில் பாடுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் குடும்பத்துடன் வசிக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான், இவரது மகன் துக்ளக்அலிகான் (வயது 17) பிளஸ் 2 படித்து வருகிறார். தற்போது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் புதன்கிழமை இரவு தொழுகையை முடித்து விட்டு இரவு அடையாறு சென்றுள்ளார். அதிகாலை ஒரு மணி அளவில் சர்தார் பட்டேல் சாலை வழியாக தனது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று அலிகான் துக்ளக் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. இதற்கிடையில், காயம் அடைந்த அலிகான் துக்ளக் ரத்தகாயத்துடன் சாலையில் விழுந்து கிடந்தார். அவருடன் வந்த நண்பர் ஜெயனூன், காயம் ஏதும் இல்லாமல் தப்பினார். விபத்து குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்த துக்ளக்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது முகத்தில் காயம் அதிக அளவில் காணப்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நடிகர் மன்சூர் அலிகான், மருத்துவமனையில் மகன் அருகில் இருந்து கவனித்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பிச்சென்ற கார் டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
Post a Comment