வரும் ஜூலை 27-ம் தேதி இளையராஜா நடத்தும் என்னுள்ளே எம்எஸ்வி என்ற இசையஞ்சலி நிகழ்ச்சி, வெறும் பாட்டுக்கச்சேரியாக மட்டுமல்லாமல், எம்எஸ்வியின் இசை நுணுக்கங்களை விளக்கும் நிகழ்ச்சியாக நடக்கப் போகிறது.
ஒவ்வொரு பாடலையும் எம்எஸ்வி உருவாக்கிய விதம், அந்த இசையின் நுணுக்கங்கள் போன்றவற்றை தன் இசைக் குழு மூலம் வாசித்து விளக்கப் போகிறார் இளையராஜா.
இந்த நிகழ்ச்சியை ஜீவா இளையராஜா அறக்கட்டளை நடத்துகிறது.
இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "இந்த நிகழ்ச்சி வெறுமனே அண்ணன் எம்எஸ்வியின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்துவது அல்ல. எம்எஸ்வி என்ற மாமேதை தந்த இசையின் நுணுக்கங்களை ரசிப்பது.
அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைத் திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்துக் காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் மெல்லிசை மன்னர் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன்.
இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம் உயிரை எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வை கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்.
அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும். அண்ணனின் உடல் மறைந்த 13வது நாளில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்," என்றார்.
இதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டதில்லை. ஒரு இசையமைப்பாளர் இறந்தால், இசைக் குழுக்கள் சில இப்படி நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால் பெரும் இசையமைப்பாளர் யாரும் அப்படி நடத்தியதில்லை. இளையராஜாதான் முதல் முறையாக எம்எஸ்விக்கு இப்படி இசையஞ்சலி நடத்துகிறார்.
Post a Comment