இசையாக என் ரத்தத்தில் கலந்திருக்கிறார் எம்எஸ் விஸ்வநாதன்!

|

-இசைஞானி இளையராஜா

ஜுபிடர் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் தினக்கூலிக்கு வேலை செய்யும் ஒரு சிறுவனாக இருந்த எம்.எஸ்.வி. ஓய்வு நேரங்களில் இசை பயிற்சி எடுத்துக்கொண்டு தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டவர்.

ஒருநாள் அபிமன்யூ படத்துக்காக எஸ்.எம்.சுப்பையநாயுடு அவர்கள் ஒரு டூயட் பாடலுக்கு மெட்டுப் போட்டபோது அது திருப்தியாக வராமல் போகவே, சிறிது நேரம் கழித்து வாசிக்கலாம் என்று முடிவு செய்தார்.

அவர் அங்கு இல்லாத அந்த இடைவெளியில் எம்.எஸ்.வி.அந்த பாடலுக்கு தானே ஒரு மெட்டு போட்டு பாட, அங்கிருந்த கோபாலகிருஷ்ணன் தபேலா வாசித்துக்கொண்டிருந்தார்.

MSV blends in my blood, says Ilaiyaraaja

அந்த நேரம் அங்கு வந்து விட்ட எஸ்.எம்.சுப்பையாநாயுடு, "டேய் என்னடா பண்ற.. இப்ப வாசிச்ச மெட்டை மறுபடியும் வாசி," என்று சொல்ல, பயந்து போய் நின்றிருந்த எம்.எஸ்.வி. மீண்டும் வாசித்து காட்ட, "இதையே டியூனாக வெச்சுக்கலாம் நீ எல்லாருக்கும் நோட்ஸ் எழுதி கொடுத்துடு.. ஆனா நீ போட்டதா சொன்னா ஆர்க்கெஸ்ட்ரா மதிக்க மாட்டாங்க நான் போட்டதா சொல்லு," என்று சொல்லி அந்த பாடலை பதியவைத்திருக்கிறார்.

அபிமன்யூ படம் வெளிவந்தபோது, 'புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மனமே பெறுவோமே" என்ற பாடல் பெரிய வெற்றி பெற்றது.

பின்னாளில் ஜூபிடர் பிக்சர்ஸ் சென்னைக்கு மாறியபோது பணியாளர்கள் எல்லோரையும் கணக்கு முடித்து அனுப்பி கொண்டிருந்தார்கள். எம்.எஸ்.வி.யையும் வேலையை விட்டு விலக்க முடிவு செய்கிறார்கள். இந்த விஷயத்தை எஸ்.எம்.சுப்பையநாயுடுவிடம் கண்ணீர் மல்க எம்.எஸ்.வி சொல்லி அழ, அவர் கையை பிடித்துக்கொண்டு ஜூபிடர் பிக்சர்ஸ் சோமுவிடம் அழைத்து சென்று, ‘உன்னுடைய ஜீபிடர் பிக்சர்ஸ் இருப்பதற்கு காரணம் அபிமன்யூ படம்தான். அந்த படம் ஓடுவதற்கு காரணம் இவன் டியூன் போட்ட புது வசந்தமாமே பாட்டுதான்" என்று அந்த சம்பவத்தைச் சொல்லி, "யாரை வேண்டுமானாலும் அனுப்பு இவனை மட்டும் விட்டு விடாதே.. கூடவே அழைத்துப்போ" என்று சொல்கிறார்.

MSV blends in my blood, says Ilaiyaraaja

இப்படி தன்னுடைய குருநாதர் மூலமே வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர் எம்.எஸ்.வி. அவர்கள்.

எம்.எஸ்.வி அண்ணா அவர்களின் இசை புலமையைப் பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து. ஏனென்றால் அவர் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களையெல்லாம் கொண்டு வந்ததை நான் ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே ஆனேன் என்பதைச் சத்தியமாக சொல்லுகிறேன்.

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய மானசீக குருவாக இருந்த சி.ஆர்.சுப்புராமன் எப்படி என்னுடைய உயிரில் உடலில் கலந்திருந்தாரோ அப்படியே எம்.எஸ்.வியும் அவர் இசையும் என் உயிரில், உடலில், ரத்தநாளங்களில் இதயதுடிப்பிலும் மூச்சுக் நகாற்றிலும் கலந்திருந்தார்.


MSV blends in my blood, says Ilaiyaraaja

தேவதாஸ் படத்தை சி.ஆர் சுப்புராமனால் முடித்துக்கொடுக்க முடியாமல் போனது. அவரது ஆசி்யினால் அந்த படத்தின் பாடல்களையும் பின்னனி இசைகோர்ப்பு பணியையும், முடித்துக்கொடுத்தார் எம்.எஸ்.வி. படத்தில் பிற பாடல்கள் நன்றாக இருந்தபோதும் எம்.எஸ்.வி. இசையமைத்த 'உலகே மாயம் வாழ்வே மாயம்' என்ற பாடல் அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த பாடலின் வெற்றியால் தேவதாஸ் படம் நீண்டநாள் ஓடியது.

அதேபோல் எம்.எஸ்.வியின் இசையினால் ஓடிய படங்கள் எண்ணிலடங்காதவை. அந்த இசை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதவை. அந்த தாக்கத்தின் அடையாளம்தான் இளையராஜா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

 

Post a Comment