சீனு ராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவலுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, அதைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். இந்தப் படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் கைகோர்த்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
பாடல்களுக்கு ஏற்கெனவே பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களான லிங்குசாமி, அவரது சகோதரர் போஸ், இயக்குநர் ரேணிகுண்டா பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் படத்தைப் பார்த்துள்ளனர்.
பார்த்து முடிந்து மனம் நெகிழ்ந்து, 'அற்புதமான படைப்பாக வந்திருக்கிறது இடம் பொருள் ஏவல்' என இயக்குநர் சீனு ராமசாமியைப் பாராட்டியுள்ளனர்.
இந்தப் படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு முடிந்ததும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சீனு ராமசாமிக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், "இடம் பொருள் ஏவலுக்கு இசையமைத்ததை பெருமையாகக் கருதுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
யுவனின் இசை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி கூறுகையில், "யுவனின் இசை இடம் பொருள் ஏவலுக்கு உயிர். அமைதியான மனிதரின் சிறு புன்னகை போல அழகு. ஒரு இளைஞன் தந்த வெதுவெதுப்பான முத்தம். நான் அந்த கருத்த இளைஞனை நேசிக்கத் தொடங்கி விட்டேன்," என்று கூறியுள்ளார்.
Post a Comment