தமிழ், தெலுங்கு தேசங்களில் எங்கு திரும்பினாலும் பாகுபலிமயம்... ஏதோ பொது விடுமுறை விட்ட மாதிரி தியேட்டர்களும் அவற்றைச் சார்ந்த இடங்களிலும் திருவிழாக் கூட்டம்.
குறிப்பாக மால்கள் அமைந்துள்ள சாலைகளில் வாகன நெரிசல் மூச்சுத் திணற வைக்கிறது. எல்லாம் பாகுபலி மகிமை.
இந்த கோலாகலத்துக்கிடையில் ஒரு வருத்தம் தயாரிப்பாளர்களுக்கு...
அது பாகுபலி படத்துக்காக தூக்கப்பட்ட அல்லது காட்சிகள் குறைக்கப்பட்ட தங்களின் படங்களை நினைத்துத்தான்.
கடந்த சில வாரங்களாக குறைந்தது நான்கு அல்லது ஐந்து படங்கள் வெளியாகி வருகின்றன கோடம்பாக்கத்தில். தெலுங்கிலும் இதே நிலைதான்.
கடந்த வெள்ளிக்கிழமை பாபநாசம், பாலக்காட்டு மாதவன், பேபி, ஒரு தோழன் ஒரு தோழி மற்றும் பரஞ்சோதி போன்ற படங்கள் வெளியாகின. இந்த 5 படங்களுமே நல்ல மற்றும் பார்க்கக் கூடிய வகைப் படங்களே. பாபநாசத்துக்கு 400க்கும் மேற்பட்ட அரங்குகள் கிடைத்தன. பாலக்காட்டு மாதவனுக்கு 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் கிடைத்தன.
மற்ற படங்கள் கிடைத்த அரங்குகளில் வெளியாகின.
இன்று பாகுபலி 600 அரங்குகளில் தமிழ்நாட்டில் வெளியானது. ஆந்திராவில் 1500 அரங்குகளில் வெளியானது.
பாபநாசம் ஓடிக் கொண்டிருந்த பல அரங்குகளிலிருந்து அந்தப் படம் தூக்கப்பட்டு, அவற்றில் பாகுபலி வெளியிடப்பட்டுள்ளது. பாலக்காட்டு மாதவன் ஓடும் அரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டு அவற்றில் பாபநாசம் வெளியிடப்பட்டுள்ளது. மல்டிப்ளெக்ஸ்களில் பெரும்பாலானவை பாகுபலிக்கே முன்னுரிமை தந்துள்ளன.
இதனால் சிறு படங்கள் நிலைமை ரொம்பவே சிரமமாகிவிட்டது. இதுகுறித்து பாலக்காட்டு மாதவன் படத்தின் தயாரிப்பாளர் லாரன்ஸ் கூறுகையில், "இந்த நிலைமைக்கு யாரை குற்றம் சொல்வதென்றே தெரியவில்லை. பாகுபலி மாதிரி பிரமாண்டங்கள் வரும்போது எங்களை மாதிரி சின்னப் படங்களின் நிலைமைதான் கஷ்டமாகிவிடுகிறது. படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்து படமும் பிக்கப்பாகி ஓடும் நேரத்தில் இப்படி நேர்ந்துவிட்டது. இந்த பிரமாண்டத்துக்கு மத்தியிலும் எங்கள் படம் ஓடிக் கொண்டிருப்பதை நினைத்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். அடுத்த வாரம் நிலைமை மாறும்," என்றார்.
Post a Comment