சென்னை: பெப்சி அமைப்புடன் சுமூக முடிவு ஏற்படும் வரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா பட தயாரிப்பாளர்களுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) இடையே கடந்த சில நாட்களாக சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் நடந்து வந்தது. இதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் பெப்சி தொழிலாளர்கள், சினிமா தயாரிப்பாளர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக திருத்தியமைக்கப்பட்ட சம்பள உயர்வை அறிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டம் முடிந்தபின், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) இடையே நடைபெற்று வந்த சம்பள பேச்சுவார்த்தையில் சுமூகமான நிலை ஏற்படாதவரை, படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பது போல், சினிமா தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்தவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டார்கள்.
அதற்கிணங்க இந்த பிரச்சினையில் ஒரு சுமுகமான நிலை திரும்பும் வரை, உள்ளூர்-வெளியூர் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ‘எடிட்டிங்', ‘டப்பிங்', பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகளையும் நிறுத்தி வைக்கும்படி, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment