மும்பை: பாலிவுட் பட உலகில் அறிமுகமாகியுள்ள இஷிதாவிற்கு அக்கா தனுஸ்ரீ தத்தா நடிப்பு டிப்ஸ் கொடுத்தாராம். இதை அவரே கூறியுள்ளார். தங்கை நடிக்கும் போது சீனியரான அக்கா நடிகைகள் டிப்ஸ் கொடுப்பது ஒன்றும் புதிதில்லையே என்றும் அவர் கேட்டுள்ளார்.
விஷால் நடிப்பில் வெளிவந்த ‘தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. தமிழில் இவர் இந்த ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார். இருந்தாலும், பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் இவருடைய தங்கை இஷிதா தத்தாவுக்கு தற்போது கிடைத்துள்ளது.
இஷிதா தத்தா தற்போது திரிஷ்யம் பாலிவுட் ரீமேக்கில் அஜய் தேவ்கானுக்கு மகளாக நடித்துள்ளார். ஏற்கெனவே கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட்டில் இவர் நடிப்பது இதுதான் முதல் படம். இந்தப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது. பாலிவுட்டில் முதல் படத்திலேயே அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்தது இஷிதாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஷிதா, தேசிய விருது நடிகர் அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஒரு புதுமுகமாக அவருடன் நான் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
அப்போது செய்தியாளர்கள், உங்களின் அக்கா தனுஸ்ரீ தத்தா உங்களுக்கு டிப்ஸ் கொடுத்தாரா என்று கேட்டனர். அதற்கு அவர், திரிஷ்யம் படத்தில் நடிக்கும் போது அக்கா வெளிநாட்ல இருந்தாங்க. அங்கேயிருந்தே டிப்ஸ் கொடுத்தாங்க என்று கூறியுள்ளார்.
அஜய் தேவ்கானும் இஷிதாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். இஷிதா மிகவும் திறமையாகவும் கவனமாகவும் நடிக்கக்கூடியவர். ‘திரிஷ்யம்' படத்தில் மிகவும் நன்றாக நடித்துள்ளார். அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று அஜய் தேவ்கான் கூறவே தேசிய விருது பெற்றது போல மகிழ்ச்சியில் இருக்கிறார் இஷிதா.
Post a Comment