லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட்டின் பிரபல நடிகையான டெமி மூரின் வீட்டு நீச்சல் குளத்தில், சுமார் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அந்த வாலிபரைப் பற்றிய தகவல்களை அமேரிக்கக் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர், அந்த வாலிபரின் பெயர் எடெனில்சன் வேல்லே வயது 21.
அவர் ஒரு புகைப்பட நிபுணர் மற்றும் ஓவியத்தில் கைதேர்ந்தவர் என்று காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மிகவும் அமைதியான சுபாவம் உடையவர் என்று அவரது நண்பர்கள் அவருக்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளனர், ஆனால் எடேனில்சன் எடுத்துள்ள பல புகைப்படங்களில் டெமி மூரின் வீடு மற்றும் நீச்சல் குளத்தைப் படமெடுத்து வைத்துள்ளார்.
நீச்சல் குளத்தில் விழுந்த பின்புதான் அந்த வாலிபர் இறந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர், ஆனால் இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை டெமி மூர்.
நான் அந்த சம்பவம் நடந்த போது ஊரில் இல்லை எனது குழந்தைகளுடன் விடுமுறையைக் கழிக்க வெளியூர் சென்றிருந்தேன், எனது வேலையாட்கள் நான் இல்லாத போது பார்ட்டி நடத்தியிருக்கலாம்.
அதில் அந்த வாலிபர் கலந்து கொண்டாரா என்பது தெரியவில்லை, எனினும் இறந்த வாலிபருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார். தற்போது வாலிபரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Post a Comment